Monday, May 16, 2022

கண்ணன் என் காதலி

 

முதல்முறை பார்த்தபோது முறுவலித்து என்னைப் பார்த்தாள் 
முகத்தினை திருப்பாது மும்மடங்கு அவள்  பொலிந்தாள்
எதனால் அவள்  என்னை இப்படி ஈர்த்தாளென இப்போதும் நானறியேன்
கலகலவென சிரிப்பாள்  கைகொடுத்து தூக்கிடுவாள்
கல்லூரி நாள்முழுதும் கற்பித்து காத்திருந்தாள்
உளமார எனை விரும்பி உறவாக பார்த்திருந்தாள் 
உடுக்கை இழந்தவன் கைபோல உயிராய் என்னை மதித்திருந்தாள்
மனதில் எனக்கு ஒரு வலி  வந்தால்
மருந்தாய் அவளது மொழியிருக்கும்
கனவிலும் எனக்கு ஒரு தீமையினை  கண்டிப்பாய் அவளும் நினைத்ததில்லை காதலால் என்னை வசியம் பண்ணி காலம் கடந்து நடத்துகிறாள்
கருப்பாய் இருந்தபோதினிலும் கட்டித் தங்கம் என்றிடுவாள்
வெறுப்பை உமிழ்ந்து பார்த்ததில்லை
வெள்ளை மனத்தில் கரவில்லை
முத்தம் அவளும் கொடுத்ததில்லை
முன்னும் பின்னும் அணைத்ததில்லை
சத்தம் இன்றி காதல் யுத்தம்
சரித்திரப் புகழாய் நடத்திவிட்டாள்
பாலினம் எதிர் எதிரில்லை
பாசாங்குகள் ஏதுமில்லை
வாலிப வயதின் நாள்முதலாய் -எனை வசியம் செய்த பேரழகி
ஆணுக்கு ஆணே ஆசைககொள்ளும்
அழகிய மாயக் கண்ணனிவன்
நாணத்தில் நானும் இருக்கின்றேன்
நாயகன் எண்ணி களிக்கின்றேன்
அம்பலத்தாடுவான் ஆணையினால்
அழகிய காதல் ஊர்வலமே !

தொழிலாளர் நாள்

 கைகளை  வீசி நடப்போம்

காற்றைக் கிழித்து நடப்போம்
பொய்யை புரட்டை புதைப்போம்
புரட்சியை வியர்வையில் விதைப்போம்
ஆயுதம் உழைப்பென்று முழங்கு
ஆதிக்கம் ஒழித்திட கிளம்பு
காகிதம் இல்லையெம் எலும்பு
காடுமலை பிளந்த இரும்பு

தொழிலாளர் உரிமைகள் காப்போம்
தொலைநோக்கு பார்வையில் நடப்போம்
உழைப்பாளி ஏய்ப்பவர் மாய்ப்போம்
உரிமைகள்  கைவர உழைப்போம்
அடலேறாய் அணிவகுத்து செல்வோம்
ஆண்பெண்  வேற்றுமைகள் கொல்வோம்
கடலெனவே ஆர்ப்பரித்து எழுவோம்
கார்ப்பரேட் சுரண்டலை ஒழிப்போம்

எட்டுமணி நேர வேலை
எல்லோர்க்கும் ஆகிடும் நாளை
சட்டென நடைமுறைப் படுத்த
சளைக்காமல் நீகொடு தோளை
கூலியே இல்லாத ஆளாய்
குடுப்பப் பெண்களை நடத்திடலாமா ?
வேலியே பயிர்மேயும் விந்தை
வெட்கம்தான் நினைத்திடு சிந்தை 

உலகத்து உழைப்பாளர் எல்லாம்
ஓர்குடைக்குள் திரண்டு நிற்போம்
கலகக் குரலெடுத்து ஒன்றாய்
கள்ளமார்க்கெட் ஒழி இன்றே
எத்தனை தோழரின் உழைப்பு
எழுந்தது உலகமே நிமிர்ந்து
அத்தனை ஈகமும் நினைப.பாய்
மேநாளை உயிராக மதிப்பாய்



Tuesday, December 7, 2021

வ.உ.சிதம்பரனார்




விழுப்புரம் 05-09-2021 மாலை 4.00 மணி


மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ 


படித்த படிப்பும் பட்டமும் பதவியும்
துச்சமாய் நினைத்த தூயவன் வ.உ.சி்
நடித்து நடித்து நாடாளும் பேர்வழிகள்
அறிவாரா அவரின் ஈகம் ?
எடுத்த காரியம் வெற்றியடைந்திட
எல்லா சொத்தையும் இழந்தவர் வ.உ.சி்
மடித்த சட்டையும் கலையாத அரசியலார்
மார்தட்டிக் கொள்கிறார் இது நியாயமா ?

சின்ன சின்ன உதவிகள் செய்தவர்
சீக்கிரம் ஆகிறார் அமைச்சராக
பொன்னை இழந்து தன்னை இழந்தவர்
பொய்வழக்கில் கைதியாய் இது நியாயமா ?
மண்ணைக் காத்திட மக்களைக் காத்திட
மார்பை உயரத்தியவர் சிறையிலே
தன்பெண்டு தன்பிள்ளை தம்மை  உயர்த்திடும்
தடியர்கள் அரசுப் பதவியிலே

வயலை ஏரியை ஆற்றை குளத்தை  விற்றவர் எல்லாம்  அமைச்சரிங்கே
அயலானை எதிர்த்து அத்தனையும் இழந்தவர்
அருமை தெரியலே நாட்டினிலே
துயிலாமல் வழக்காடி துயர்தாங்கி வாதாடி
துணிவாய் எதிர்த்தவர் தெரியலே
வயிற்றுப் பிழைப்புக் காய்
வாயாடி வென்றவர்
வளமாக வாழ்கிறார் காட்சியிங்கே
வரலாற்று நாயகன்
வள்ளுவத்தை வளர்த்தவன்
வான்புகழ் வ.வ.சி மாட்சியெங்கே ?


பட்டம் உதறினான் பதவி உதறினான்
சட்டம் உதறினான் நாட்டுக்கு
பாவிப் பயல்களின்
பழியாலே தன்வாழ்வில்
பஞ்சப் பனாதியானான்  நடுரோட்டிலே

நட்டம் இலாபம்
கணக்குப் பார்த்தவர்
சேர்த்தனர் சொத்தை
வாரிசுக்கே
சட்டம் படித்தும்
பரங்கியர் எதிர்த்ததால்
நட்டம் வ.உ.சி குடும்பத்துக்கே

அந்நியனுக்கு அடிபணிந்து
அரசி ஆலை
அவரெல்லாம் இன்றிங்கே பெரிய ஆளே
கண்ணியமாய் உழைத்தவரை தெரியவில்லை
கடலை ஆண்ட தலைவனுக்கோ
மதிப்பே இல்லை
நாட்டுக் கோட்டை
செட்டிமார்கள் வட்டிக்காக
நாட்டை விட்டு
அயலகங்கள் நாடிச் சென்றார்
போட்டி போட்டு இரங்கூன்,
மலேசியா  சொத்தை சேர்த்தார்
நாட்டை விட்டு
வெள்ளையரை ஓட்டுதற்கு
நம்தமிழர் மீண்டும்
கடலை ஆள்வதுதான்
நல்லவழி என்று
வ.உ.சி சபதமேற்றார்
காட்டை விற்று
வீட்டஐவிற்றுத்தானே
கப்பல் விட்டார்

கண்டதுமே பரங்கியர்கள் கலகலத்தார்
கண்படி கேசைபோட்டு சிறையில் வைத்தார்
பிணையெடுக்க முடியாத பிரிவில் போட்டார்
முனைமழுங்கா வீரத்தை உரசிப் பார்த்தார்
தனையிழந்தும் தளராத உறுதியோடு
தன்மான சிங்கமாய் எதிர்த்து நின்றார்


                       (வேறு )
சணல் பிரிக்கும் எந்திரத்தை சுற்றி சுற்றி
சதைப்பிய்ந்து கையெலாம் இரத்தக் காயம்
மணல் திருடும் கூட்டத்தார் மாபியாக்கள்
மாளிகைகள் கார்பவனி ஊர்வலங்கள்
அனல்தெறிக்கும் பேச்சுக் காரன் கால்களிளே
அடடா பிணைத்திருந்த சங்கிலிகள்
பணமிருந்தும் பதவியிருந்தும் உதறிவிட்டு
பாழ்சிறையில் செக்கிழுத்தார் சிதம்பரமும்

வெள்ளையரின் ஆட்சியிலே
வெங்கொடுமை சாக்காடு
கொள்ளையரின் ஆட்சியிலே கொடுமையென்னே வெட்கக்கேடு
தள்ளாத வயதினிலும்
தன்வயிற்றுப் பிழைப்புக்காய்
சில்லரையில் மண்ணெண்ணெய்
விற்றாரே
அல்லல்பட்டு வ.உ.சி செத்தாரே


வேறு எந்த நாட்டினிலும்
இப்படியோர் சோகம் உண்டா ?
விடுதலைக்கு உழைத்தவர்கள்
இப்படித்தான் செத்ததுண்டா?
ஏறுபோல் நடையழகன்
வ.உசி ஈகம்போல் கண்டதுண்டா?
எழுச்சிமிகு வீரனுக்கு
இப்படியோர் மரணம் நன்றா?

நம்பிவந்த மனைவி
மக்கள் நடுத்தெருவில்
கையேந்த பொறுத்துக் கொள்வேன்
நான்பிறந்த நாட்டுக்கந்த
நிலமையென்றால்  ஏற்கமாட்டேன்
கம்பீரமாய் கர்ஜித்த அரிமா தானே கடைசியிலே தவித்தது கஞ்சிக்காக
காடையர்கள் விடுதலையால் பதவிபெற்று
கர்மவீரன் ஈகத்தை மதிக்கவில்லை

அடிமையென இருந்த நாட்டில்  அதிகம் தொல்லை
அன்றாடச்  சித்ரவதைக் கோர் எல்லையில்லை
குடிகளுக் காய் குடும்பம் இழந்த தலைவனுக்கு
குடிப்பதற்கும் நீரில்லா அவல மிங்கே
கொடிகாக்க கொதித் தெழுந்த தலைவனுக்கு
கொள்ளையர்கள் கொடுத்த தெல்லாம் வறுமைதானே
தடியெடுத்த தடியனெல்லாம் தலைவ னிங்கே
தன்மான சிங்கத்துக்கோ மதிப்பே இல்லை

வ.உ.சி
இரட்டை ஆயுள் சிறையைப் பெற்றவர்
இளமை முழுதும் நாட்டுக்கே இழந்தவர்
பரங்கியர் கண்களில் பயத்தை விதைத்தவர்
பாற்கடல் குலுங்கிட கப்பல் விட்டவர்
மார்தட்டி பரங்கியரை மல்லுக்கு இழுத்தவர்
மானம் இழக்காத மாவீரம் படைத்தவர்
ஓர்நாளில் உலகையே உலுக்கிப் பார்த்தவர்
ஓயாது அடிமைத் தளை உடைத்திட உழைத்தவர்

தமிழை உயிராய் தலைமேல் வைத்தவர்
தன்னெழுத்தால் தமிழுக்கு அணிகலன் சேர்த்தவர்
வள்ளுவத்துக்கு உரையை அளித்தவர்
வான்புகழ் இலக்கியம் வார்த்துக் கொடுத்தவர்
கப்பல் விட்டிடும் ஆளுமை நிறைந்தவர்
கடைநடத்த தெரியாத வியாபாரி ஆனவர்
சொந்தக் கட்சியின் சூட்சியில் மடிந்தவர்
சுதந்திரம் பெற்றும் சுண்ணாம்பாய் வெந்தவர்

படை நடத்திடும் பக்குவம் தெரிந்தவர்
பாசாங்கு அறியாத பாரத புதல்வரவர்
காந்தியை எதிர்த்து திலகர்வழி சென்றவர்
காங்கிரஸ் சூட்சியில் காணாமல் போனவர்
சிராவயல் இளைஞர்கள் நூல்நூற்கும் காட்சியை
சிரித்துக் கண்டித்து சீர்திருத்தம் சொன்னவர்
இராட்டை பிடிக்கும் கைகளில் எல்லாம்
துமுக்கியை பிடிக்க தூண்டுகோள் ஆனவர்



கோவை சிறைமதிலும் உன் கீர்த்தி சொல்லும்
கொட்டடிகள் எல்லாம் உன் மாட்சி சொல்லும்
சாவை எதிர் கொண்ட வீரம் சொல்லும்
சரித்திரமே சாட்சியாகி உன் ஈகம சொல்லும்
                                (வேறு )
விடுதலை அடைந்ததும் விளைத்திட எத்தனை நினைத்திருப்பாய்
வீரமாய் முழங்கிய போதென்ன நினைத்திருப்பாய்
அந்நியர் விரட்டிட எப்படி உழைத்திருப்பாய்
-எத்தனை
ஆயிரம் இரவுகள் உறக்கத்தை தொலைத்திருப்பாய் 
பெற்ற விடுதலை நாட்டினில் உனக்கு நேர்ந்ததென்ன
பேடிகள் உந்தன் ஈகம் மறந்து செய்ததென்ன
கோடிகள் சேர்த்திட ஆட்சியாளர் கூத்தடித்ததென்ன
-உன்
கொடுமை கண்டும் அயர்ந்தவர்கள் படுத்ததென்ன
வீதியில் உன்னை அலைந்திட விட்டனரே
நாதியற்றவர் போலுன்னை நடத்தினரே

இந்திய தேசமே மனசாட்சி உனக்கிருந்தால்
இப்படியோர் ஈகத்தை புழுதியில் விடுவாயா ?
காந்திய தேசமே உனக்கு கருணை இருந்தால்
கப்பல் ஓட்டிய களப்போர் வீரன்  -மளிகை
கடைநடத்திடும் அவலத்துக்கு தள்ளுவாயா?

மண்ணைக் காத்திட 
பொன்னை பொருளை 
இழந்தவனை
மண்ணெண்ணய்க் 
கடைவைத்து 
பிழைத்திடப் பார்ப்பாயா ?
எல்லோரும் சுதந்திரம் சுவாசிக்க
தான் சுவாசிக்க மறந்தவனை
சில்லறை வணிகத்தில்
சிக்குண்டு பிழைக்க விடுவாயா ?

கல்வியில் சிறந்தவனை
கப்பலோட்டிய தமிழனை
வல்வில்ஓரி போல் வள்ளலை
சல்லிக்காசுக்கும் மதிக்காத
சனநாயகம் ஒரு கேடா ?

பல்லக்குத் தூக்காமல்
பாடைக்கும் அஞ்சாமல்
பரங்கியரை எதிர்த்தவனை
பாராமுகமாய் மறந்தீரே
பாருக்குள்ளே நல்ல நாடா?
பகர்வீரே ?

கடற்கரையில் கழிமுகத்தில்
உப்புக் காய்ச்சியதே
வீரமிக்க போராட்டமென்றால்
ககனத்தை ஆண்டவனை
கடலாதிக்கம் புரிந்தவனை
கால்காசுக்கும் மதிக்காமல்
ஆழ்கடல் மீதிலே
ஆரவாரமாய் கப்பல் விட்டானே வ.உ.சி
இந்த வீரத்துக்கு இணையுண்டா?
























 மாடாகப் பாடுபட்டு

மழை ழை வெய்யில

தாங்கிக்கிட்டு
ஓடாக உழைச்சு
பிள்ளைங்க
ஒசர உசுரு கொடுத்து
உழைச்சு ஜனங்க தவிக்க
உசுர வாங்கும் நீட்டு
உதவாதினி ஓட்டு

கஞ்சியின்னும் கூழுயின்னும்
கண்டதையும் குடிச்சு
காளை மாட்டை மேச்சு
களையை வெட்டி பொழைச்சு
கல்வி கற்க புள்ளைங்களை
காத தூரம் அனுப்பி
கவலை அணிஞ்சு கிடக்க

ஒட்டுமொத்த நாட்டுக்குமே
ஒரே தேர்வை புகுத்தி -ஏழைங்கல
ஓரமாக நிறுத்தி
ஓரவஞ்சனை செய்யும்
ஈரமில்லா தாயே
எதுக்கு எங்களுக்கு நீயே !

பன்னெண்டு வருஷ படிப்பு
பத்தாதா என்ன வெறுப்பு
பாழாப்போன சட்டம் -பிள்ளைங்கள
பாடையில் ஏத்தும் சட்டம்-இனி
செல்லாது உங்க கொட்டம்

பள்ளியிலே படிக்கும் போதே
பார்த்து பாத்து  ஸ்டெத்தெடுத்து
பலவருஷம் டாக்டராவே
வாழ்ந்து வந்த பிள்ளைங்கள
படிக்க வேணாமின்னு தடுக்க
பார்த்து வச்சு ஆப்பு
நீட்டு  என்னும் வேட்டு

கனவெல்லாம் கலைஞ்சு போக
நெனவெல்லாம் நீர்த்து போக
கழுத்தில் கயித்த மாட்டி
கருகும் பிஞ்சு உசுரு -உங்களுக்கு
உசுறு இல்ல மசுறு ?

அனிதாவை பறிகொடுத்தோம்
அழுதழுது புலம்பி நின்னோம்
அடுத்தடுத்து மரணங்கள்
அரச படுகொலை ரணங்கள்
வாழப்பிறந்த புள்ளையெல்லாம்
வாரிக்கொடுத்து மாரடிக்க -நாங்க
வாங்கிவந்த வரமா -இந்தமண்ணு
வாய்க்கரிசி வயலா ?

யாருக்குமே நெஞ்சமில்ல
கொஞ்சங்கூட ஈரமில்லே
கூறுகெட்ட தேசத்தில
குழந்தைளகள பறிகொடுத்து
கூடிநின்னு அழுவுறோம்
குமைஞ்சு நின்னு நொறுங்குறோம்

ஏட்டுக்கல்வி எட்டாதின்னு
எழுதி வைச்ச சட்டமா
எங்களையே வதைக்குறான்
எவந்தான் இதக் கேக்குறான் ?

தலைகீழா மாற்றம் வரும்
காலம் வெகுதூரமில்ல
கொலைகார கும்பல் அழியும்
நாளும் வெகுதூரமில்ல
சேர்ந்து வாங்க நடப்போம்
செறுபகையை முடிப்போம் !

ஆறாம் விரல்

 


ஆடுகளாய் சாய்ந்த மக்களெல்லாம்
அறிவைப் பெற்றனர் எழுத்தாலே
மேடு பள்ளங்கள் சமமாச்சு
மேல்கீழ் நிலைமைகள் சரியாச்சு
நாடுகள் சமைந்தன எழுத்தாலே
நன்மைகள் விளைந்தன எழுத்தாலே
கோடுகள் கலைந்தன எழுத்தாலே
கோட்டைகள் தகர்ந்தன எழுத்தாலே 

ஆறாம் விரலாம் எழுதுகோலால்
அத்தனை அரசையும் பெயர்த்தெடுத்தார்
கோரமுகங்களை இனங்காட்டி
கொள்கை முழக்கங்கள் தான்தீட்டி
நேராய் சமூகத்தை திசைதிருப்பி
நிமிர்த்திய நெம்புகோல் எழுதுகோல்கள்
பாராய் வரலாறு முழுவதிலும்
பாட்டை போட்டன எழுதுகோல்கள்

எழுதுகோல் ஆயுதம் என்றறிந்து
எதேச்ச திகாரர்கள் பயந்தார்கள்
எழுத்தாளர் அறிஞர்கள் அழித்தொழிக்க
எத்தனை சூழ்ச்சிகள் செய்தார்கள்
அச்சத்தை துறந்து அறிஞரெலாம்
ஆறாம் விரல் கொண்டு எதிர்த்தார்கள்
துச்சமென தூக்கி எறிந்தார்கள்
தூவல் புரட்சி படைத்தார்கள்











வேண்டும்


கைப்பிடித்து காலார நடக்க வேண்டும்
கதை கதைத்து கண் குளிர்ந்து சிரிக்க வேண்டும்
தைப்பொங்கல் போல நெஞ்சம் பொங்க வேண்டும்
தமிழ்ப் பேசி உலகமெல்லாம் திரிய வேண்டும்
பொய்ப் பேசி சண்டையிட்டு பிரியவேண்டும்
பொறுக்காமல் மறுகணமே இணையவேண்டும்
நொய்க் கஞ்சி போலத்தான் கொதிக்க வேண்டும்
நோன்பை போல் காதலைத் தான் மதிக்க வேண்டும்
மெய்த்தீண்டி மென்னுணர்வால் ஈர்க்கவேண்டும்
மேலுலகு கீழுலகு வெல்ல வேண்டும்

அன்றாடச் சிக்கல்களை மறக்க வேண்டும்
அரிசி பருப்பு போதாமை ஒதுக்க வேண்டும்
நன்றாக புரிந்துநாம் நடக்க வேண்டும்
நாற்றிசையும் நமக்காக விடிய வேண்டும்
தின்றதையே தின்னுவதை தள்ள வேண்டும்
தினம் புதுமை எண்ணத்தில் கொள்ள வேண்டும்
என்றும் இளமை மனத்தோடு இருக்க வேண்டும்
அப்படியே இந்த வாழ்வை வாழ வேண்டும்


நான் நினைக்கும் நேரம் நீ எனக்கு வேண்டும் நாளெல்லாம் உன்நினைப்பே எனக்கு வேண்டும்
தான் நினைத்து நடப்பதையே நிறுத்த வேண்டும்
தனக்காக வாழ்வதையே தவிர்க்க வேண்டும்
வானிடிந்து வீழ்ந்தாலும் உறுதி வேண்டும்
வாஞ்சையோடு வாழ்வையே  வாழ வேண்டும்
தேனிலவு மனத்தோடு தினமும் வேண்டும்
தெவிட்டாது அன்பை பறிமாற வேண்டும்

பூவுக்குள் மணமாக இருக்க வேண்டும்
 புத்தாண்டின் முதல் நாளாய் பிறக்க வேண்டும்
நாவுக்குள் தமிழாக  மணக்க வேண்டும்
நடைநடந்து பூமியை ரசிக்க வேண்டும்
சாவுக்கும் அஞ்சாமல் எதிர்க்க வேண்டும்
சந்தனமாய் அன்பையே அணிய வேண்டும்
கோவுக்கும் பணியாத கொள்கை வேண்டும்
கொடையாக உயிரையும் கொடுக்க வேண்டும்